கரோனா பாதித்தவர்களுக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு நாள்தோறும் 2 மணி நேரம் கரோனா நோயாளிகளுக்கு மட்டும் நீராவி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நீராவி சிகிச்சைக்கு நொச்சி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை, வேம்பு, யூக்கலிப்டஸ் உள்ளிட்ட மூலிகைகள் பயன்படுத்தப்படும்.
இந்த மைய திறப்பு விழாவுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளரான மருத்துவர் என்.விஜயகுமார் தலைமை வகித்தார். நிலைய மருத்துவர் எம்.கோவிந்தராஜ், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் செல்வம், சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் ரூபதர்ஷினி, செவிலியர் தனலட்சுமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை சித்தா மற்றும் யோகா பிரிவு மருத்துவர் செல்வம் கூறியது: தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இந்த நீராவி சிகிச்சை வழங்கப்படுகிறது. கரோனா நோயாளிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும். இதன் மூலம் நுரையீரலுக்கு நல்ல சுவாசம் சென்றடைந்து கிருமிகள் அழிவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை, மன்னார்குடியில் உள்ள அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மூலிகை நீராவி சிகிச்சையை வழங்குகின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago