வேலூர் மாவட்டத்தில் அடுத்து வரும் 10 நாட்களுக்குள் அரசு மருத்துவமனைகளில் 357 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த உள்ள தாக மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை முன்னெச் சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில், கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் மே மாதம் 11-ம் தேதி நிலவரப்படி 11,746 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 7,722 பேர் குண மடைந்த நிலையில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் தொற்று உறுதியாகி மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,933-ஆக உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய கூடுதலாக படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப் பட உள்ளன. அதன்படி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 260, குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் 60, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 37 என மொத்தம் 357 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் வரும் 10 நாட்களுக்குள் ஏற்படுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை 1,235 படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15 லட்சம் பேர் உள்ளனர். இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 10 லட்சத்து 73 ஆயிரத்து 754 பேர் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாநில அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
மாவட்டத்தில் தற்போது 5,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
சாதாரண சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி இருந்தால் அருகில் உள்ள அங்கீகாரம் பெறாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று 4,5 நாட்களுக்குப் பிறகு நோய் தீரவில்லை என்று அரசு மருத்துவ மனைகளுக்கு வருகின்றனர். சாதாரண அறிகுறி இருந்தாலே அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், மாநகராட்சி நல அலுவலர் சித்ர சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, வேலூர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் துரை முருகனை சந்தித்த மாவட்ட கண் காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர், வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago