திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இம்மாவட்டத்தில் கரோனாதடுப்பு மற்றும் சிகிச்சைகள்தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையருமான க.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, மாதவரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களான வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், க.கணபதி, ஜோசப் சாமுவேல் மற்றும் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் கோ. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்எல்ஏக்கள் கோரிக்கை
கூட்டத்தில் அமைச்சர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்டோர் திருவள்ளுர் மாவட்டத்தில் கரோனா தடுப்புநடவடிக்கைகளை துரிதமாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கு சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கைகள் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவை கண்டறியப்படும்
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.அந்த ஆய்வின் மூலம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் தேவையான அடிப்படை தேவைகள் என்ன என்பதை கண்டறிந்து, அவை பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago