தமிழகத்துக்கு திரவ ஆக்சிஜன் கொண்டுவர ஒடிசா மாநிலத்துக்கு - 5 டேங்கர் லாரிகளுடன் புறப்பட்ட இரு விரைவு ரயில்கள் :

தமிழகத்துக்கு திரவ ஆக்சிஜன் கொண்டுவர, திருவள்ளூரிலிருந்து, ஒடிசா மாநிலத்துக்கு இரு நாட்களில் 5 டேங்கர் லாரிகளுடன் 2 விரைவு ரயில்கள் புறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸால்பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகஅளவில் ஆக்சிஜன்தேவைப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தின் தேவைக்காக ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜன் எடுத்துவர ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆக்சிஜன் எடுத்து வருவதற்காக தென்னக ரயில்வே சார்பில், நேற்று முன் தினம் திருவள்ளூரிலிருந்து, இரு டேங்கர் லாரிகளுடன் விரைவு ரயில் ஒன்று, ரூர்கேலாவுக்கு புறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு திருவள்ளூரிலிருந்து, 3 டேங்கர் லாரிகளுடன் ஒரு விரைவு ரயில் ரூர்கேலாவுக்கு புறப்பட்டது.

இவ்விரு விரைவு ரயில்களும் அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக ரூர்கேலா சென்றடைந்து, அங்கு ஆக்சிஜனை நிரப்பிக் கொண்டு மீண்டும் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தடையும். அதன் பிறகு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பிரித்து அனுப்பப்பட உள்ளது என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE