காவல்துறையின் கரோனா குறித்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு : துபாயிலிருந்து குரல் கொடுத்த வானொலி செய்தி வாசிப்பாளர்

By எஸ். முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா குறித்த காவல்துறையின் விழிப்புணர்வு ஆடியோவுக்கு துபாய் ரேடியோ ‘கில்லி’யில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் அனுராதா என்பவர் குரல் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கரோனா பெருந்தொற்று சங்கிலி தொடரை அறுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வேண்டுகோள் வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பு காவல்துறையின் சார்பாக முக்கிய மார்க்கெட் பகுதி, வாகன தணிக்கை செய்யுமிடங்கள் மற்றும் அனைத்து சோதனைச் சாவடிகளில் ஒலிபரப்பப்படுகிறது.

அந்த குரலுக்குச் சொந்தக்காரர் மதுரையைச் சேர்ந்த அனுராதா என்பவர். தற்போது துபாயில் உள்ள துபாய் ரேடியோ கில்லி 106.4 என்ற தமிழ்ப் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரியான அனுராதா, திரைப்படங்களுக்குப் பின்னணி குரல் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், அகில இந்தியா வானொலி நிலையத்திலும், முன்னணி தமிழ்ப் பண்பலை களிலும் வர்ணனையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் ஏற்கெனவே மதுரை மாநகர காவல்துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆகியவற்றுக்காக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பைத் தயாரித்து இலவசமாக அளித்துள்ளார். அதேபோல் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தயாரித்து தனது குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

அந்த ஒலித்தொகுப்பை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் காவல்துறையினர் ஒலிபரப்பி வருகின்றனர்.

சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, அதை தனது சொந்த குரலில் ஒலித்தொகுப்பாக பதிவு செய்து இலவசமாக வழங்கி வரும் அனுராதாவின் சேவையை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்