விருதுநகரில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் அரசு மருத்துவமனையிலேயே ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப் பட்டோர் மருத்துவமனைக்கு வரும்போது சரியான மருத்துவ வசதி செய்து கொடுத்து இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

விருதுநகர் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆக்சிஜனுக்கு சற்று பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய தொழில்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தற்போது மாவட்டத்தில் 62 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. 90 வரை தேவைப்படுகிறது. ஆனால், 200 சிலிண்டர்கள் வரை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனை களிலும் போதிய அளவு சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் அறிவு றுத்தியுள்ளோம். பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

மாவட்டத்தில் 33 மருத்துவர்களும், 120 செலிவியர்களும் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் பணியிடங்கள் நிரப்பப்படும். 1,420 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு மருத்துவ மையங்கள் தயாராக உள்ளன. 300 படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட உள்ளன.

கபசுரக் குடிநீர் வழங்குவது முகக் கவசம் வழங்குவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையிலேயே ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியும் போதிய அளவு இருப்பு உள்ளது, என்றார்.

சிங்கப்பூரிலிருந்து 248 சிலிண்டர்கள்

தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கூறுகையில்,

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் 80 மெ.டன் ஆக்சிஜன் பெறப்பட்டுள்ளது. சிப்காட் மூலம் சிலிண்டர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 248 சிலிண்டர்கள் விமானப்படை விமானம் மூலம் முதல்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளன. தேவையான பகுதிகளுக்கு அவை வழங்கப்படும். கேரளாவிலிருந்து பெறப்பட்ட40 மெ.டன் ஆக்சிஜன் இன்னும் வந்து சேரவில்லை. மத்தியத் தொகுப்பிலிருந்து 419 மெ.டன் ஆக்சிஜன் தமிழகத்துக்குப் பெறப்பட்டுள்ளது. தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மாநிலத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்திக்கு முன்வந்துள்ளன. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள ஆலைகளில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க தொழில்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது," என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்