துபாயில் உயிரிழந்த கணவர் உடலை சொந்த ஊருக்குக்
கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இறந்தவரின் மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஜெயப்பிரகாஷ் (44). இவர் கடந்த 2020-ம் ஆண்டு துபாய்க்கு வாகன ஓட்டுநராகப் பணிக்குச் சென்றார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெயப்பிரகாஷுக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயப்பிரகாஷ் கடந்த 4-ம் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணம் குறித்து முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. அவரது உடலும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதுகுறித்து ஜெயப்பிரகாஷின் மனைவி நாகலெட்சுமி, மத்திய வெளியுறவுத்து றை அமைச்சகம், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் ஆகியோருக்கு மனு அனுப்பினார். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ரெகுநாதபுரம் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர் முனியசேகரன் ஆகியோருடன் நாகலெட்சுமி வந்தார். பின்னர் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நாகலட்சுமி மனு அளித்தார். அவர் கூறுகையில், எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பம் வறுமையில் உள்ளது. கடன் பெற்று கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் கணவர் உயிரிழந்துவிட்டார். எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், குடும்பத்துக்கு நிவாரணத் தொகை கிடைக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago