சிவகங்கை அரசு மருத்துவமனையில் - முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் வார்டு மேலாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 28 பேர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். மேலாளருக்கு மாதம் ரூ.15 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12,500 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தில் பணிபுரிந்த 7 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக கரோனா தடுப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்களுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து பல்நோக்குப் பணியாளர்கள் கூறுகையில், கரோனா தடுப்புப் பணி மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பிறகு எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு மீண்டும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலேயே பணி வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் கூறுகையில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக பணியாளர்கள் இருந்ததால் குறைக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 7 பேருக்கும் கரோனா தடுப்பு பணி வழங்கியுள்ளோம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்