திருத்துறைப்பூண்டியில் - நகரப் பேருந்துகளை அதிகரிக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகரப் பேருந்துகளை அதிகரிக்கக் கோரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ.கண்ணப்பனிடம் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது:

திருத்துறைப்பூண்டி பகுதி முழுவதும் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகளே பெருமளவில் வசித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து 65 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பேருந்துகள் அதிவிரைவு பேருந்துகளாகவே உள்ளன. இதன் காரணமாக, முதல்வர் அறிவித்தபடி நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்து, தற்போது இயக்கப்படவில்லை. அந்த நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். இதன்மூலம் பாண்டி, இடும்பவனம், தொண்டியக்காடு, அவரிக்காடு பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், வேதபுரம், திருவாரூர் ஆகிய வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகளை இயக்க பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்