தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் - எம்.பி, எம்எல்ஏக்கள் ஆய்வு : தேவையான வசதிகள் பெற்றுத் தரப்படும் என உறுதி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராசா மிராசுதார் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டிகேஜி.நீலமேகம் (தஞ்சாவூர்) ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளரிடம் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கூறியது: தமிழக முதல்வர் நேற்று முன்தினம் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தவுடன், அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அழைத்து, அரசு மருத்துவமனைகளில் என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து அரசு அலுவலர்கள், மருத்துவர்களுடன் ஆய்வு செய்து, ஏதேனும் குறைகள் இருந்தால், அதுகுறித்து உடனடியாக முதல்வரின் தனிச் செயலாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, தஞ்சாவூர் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் வசதி, தடுப்பூசி மருந்துகள் மற்றும் தேவைகள் குறித்தும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவை, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பெற்றுத் தரப்படும்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை நோயாளிகள் பாதுகாப்புடன் உள்ளனர். அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரும் காலங்களில் நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், உரிய ஏற்பாடுகளை செய்து, சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றார்.

முன்னதாக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணி தொடர்பாக மருத்துவ அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வில், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE