விடுபட்ட விவசாயிகளுக்கு - இடுபொருள் நிவாரணம் வழங்க கோரிக்கை :

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, இடுபொருள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:

கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில், பருவம் தவறி பெய்த கனமழை மற்றும் புயல் பாதிப்பால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, தமிழக அரசால் இடுபொருள் நிவாரணம் வழங்கப்பட்டது. இதில், ஆவணங்கள் தவறாக உள்ளது என விவசாயிகள் பலருக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டதால் நிவாரணம் வழங்க முடியவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசும் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் குறிப்பாக, அம்மாப்பேட்டை ஒன்றியம் ஆலங்குடி, காட்டுக்குறிச்சி கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

எனவே, இடுபொருள் நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE