செங்கல்பட்டு மாவட்ட அரசு வழக்கறிஞர் பதவிக்கு - திமுக வழக்கறிஞர்களுக்கு இடையே கடும் போட்டி :

செங்கல்பட்டு அரசு வழக்கறிஞர் பதவிக்கு திமுக வழக்கறிஞர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களிடம் சிபாரிசுக்கு முயற்சித்து வருகின்றனர்.

நீதிமன்றங்களில், அரசுத் தரப்பில் ஆஜராக, ஆளும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் இருந்ததால் அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்தனர்.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளதால், அந்த கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டந்தோறும் பட்டியல் தயாராகி வருகிறது.

செங்கையில் பி.பி. எனப்படும் பப்ளிக் பிராசிக்யூட்டர், ஜி.பி. எனப்படும் கவர்மென்ட் பிளீடர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணியில் பொறுப்பில் உள்ளவர்கள் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பதவியை கைப்பற்ற கடுமையாக முயற்சித்து வருகின்றனர். வழக்கமாக, மாவட்ட அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்த பட்டியலின் அடிப்படையில் மேலிடம் பரிசீலித்து அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். இந்த மாத இறுதிக்குள் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் திமுக வழக்கறிஞர்கள் அக்கட்சியின் சட்டத் துறைக்கு வரும் 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பெற்று, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முத்த வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்த பிறகு நீதிமன்றம் வாரியாக அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்து முதல்வரிடம் பட்டியல் ஒப்படைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்