திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 1,204 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். வைரஸால் பாதிக்கப்பட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில், கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாததால், மருத்துவமனை வளாகத்தில் படுத்துக் கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு ஆட்சியர் பா.பொன்னையாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முழு கவச உடையுடன் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனாவார்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சவ் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.
ஆய்வில், கரோனா வார்டில் உள்ள 250 படுக்கைகளில், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் 80 உட்பட 200 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, மருத்துவமனை வளாகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் படுத்திருப்பதும், நோயாளிகளின் உறவினர்கள் அதிக அளவில் இருந்ததும் தெரியவந்தது. இதனால், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களை ஆட்சியர் கண்டித்தார்.
தொடர்ந்து, திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி, புதூரில் செயல்படாமல் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago