முதல்வர் மருத்துவமனையில் உள்ள சூழலில், பாஜகவின் அடுத்தடுத்த நடவடிக்கையால் கடும் குழப்பமான சூழல் புதுச்சேரியில் நிலவுகிறது. கரோனா தொற்று பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில் எவ்வித நிவாரணமும் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும் போட்டியிட்டன.
இதில்,என்ஆர்.காங்கிரஸ், பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிறுக்கும் பாஜக, துணைமுதல்வர் உட்பட 2 அமைச்சர் பதவிகளையும், சபாநாயகர் பதவியையும் கேட்டுவருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி தருவதாக கூறுகிறார். இதனால், புதிய ஆட்சியில் அமைச்சரவை உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவிப் பிரமாணம் ஏற்றதோடு ஆட்சியியல் நிர்வாகம் அப்படியே நிற்கிறது.
பாஜகவின் அரசியல்
இதனிடையே, முதல்வர் ரங்கசாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த அசாதாரண சூழலில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களே பதவியேற்காத நிலையில், புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்எல்ஏக்களை தங்கள் கட்சியினரை மத்திய பாஜக அரசு நேரடியாக நியமித்துள்ளது.கைகொடுக்க முன்வரும் திமுக
"சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே என்ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க புதுவை திமுக விரும்பியது. கட்சித்தலைமை அனுமதிக்காததால் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து, 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ரங்கசாமியின் உடல் நலம் குறித்து தற்போது கேட்டறிந்துள்ள தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ரங்கசாமி நலம்பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தற்போதைய பாஜகவின் செயல்பாடுகளினால் திமுக தரப்பும், ரங்கசாமியிடம் நெருக்கம் காட்டுகிறது. இதன் முடிவை ரங்கசாமிதான் எடுக்க வேண்டும்" என்கின்றனர் அரசியல் முக்கியஸ்தர்கள். மருத்துவமனையில் ரங்கசாமி இருக்கும் நிலையில், என்ஆர்.காங்கிரசுக்கு இணையாக தங்கள் தரப்பிலும் சம பலம் உள்ளது என நிரூபிக்கும் வகையில் பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்துள்ளது.
மாநில அரசிடம் ஆலோசிக் காமல் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியி னரும் கண்டித்து வருகின்றனர்.
நிவாரணம் கிடையாதா?
கரோனா 2வது அலை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே புதுவையில் பரவத் தொடங்கியது. தற்போது அசாதாரண நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த 7-ம் தேதி பதவியேற்ற முதல்வர் ரங்கசாமி கரோனா தடுப்பு பற்றி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய தினம் 3 கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டு ரங்கசாமி சென்று விட்டார். அதன்பின் 9-ம் தேதி சட்டப்பேரவைக்கு வந்த ரங்கசாமி 20 நிமிடங்கள் மட்டும் பணிகளை கவனித்துவிட்டு வெளியேறி விட்டார். தற்போது கரோனா தொற்றால், அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கரோனாவுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழகத்தைப் போல் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
மொத்தத்தில், புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்களாட்சி அதிகாரத்துக்கு வராத நிலை உள்ளது. புதிய ஆட்சி அமைந்தும், நிர்வாக பணிகள் தொய்வு, பாஜகவின் உள் அரசியல், நிவாரண உதவிகள் எதுவும் அறிவிக்கப்படாதது என புதுவை மக்கள் விரக்தியில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago