விருதுநகரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு காய்கறி சந்தை நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சுற்றி வருவதால் நோய்த் தொற்று கட்டுக்குள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விருதுநகர் பஜாரில் காய்கறி வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர். இதனால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பஜாரில் உள்ள காய்கறி கடைகளை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு மாற்ற நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, விருதுநகர் பஜாரில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் நேற்று முதல் அடைக்கப்பட்டது. அங்கிருந்த காய்கறி கடைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. போதிய இடவசதி இருந்ததால் பொதுமக்கள் நெரிசல் இன்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
ஆனாலும், வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பகல் 12 மணிக்கு மேலும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து காய்கறி மார்க்கெட் இயங்கியது. தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்திய பின்னரே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
விருதுநகர் பஜாரில் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டபோதும் மளிகை மற்றும் பலசரக்கு வாங்குவதற்காக பஜாரில் ஏராளமானோர் திரண்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், விருதுநகரில் நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியும், வழக்கம்போல் அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாடினர்.
இதேபோன்று, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் வழக்கம்போலவே காணப்படுகிறது. அரசு எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஊரடங்கு அமல்படுத்தினாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago