முழு ஊரடங்கு காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய சிறு தொழில்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலாளர் எம்.வி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முன்னுரிமை பெற்ற துறையாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் சுமார் 23.60 லட்சம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதன் மூலம் 151.61 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில்கள் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி முதலீட்டில் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 6 ஆயிரம் வகையான பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் துறைகள் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது.
வங்கிகளில் கரோனா சிறப்பு கடன் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த கடனுக்கான வட்டி மட்டுமே வங்கிகளால் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது, அந்த கடனுக்கான அசல் தொகை செலுத்த வேண்டிய காலம் தற்போது தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில் துறை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழில் முனைவோர்களுக்கு கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. ஆகவே, கரோனா கடன் உதவிக்கான அசல் தொகையை வசூலிக்கும் காலத்தை மீண்டும் தள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்துக்கு தொழில் கூடங்களுக்கான உயர் மின் அழுத்த கோரிக்கை கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இது தவிர மின்சாரத்துக்கு நிலையான கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய தாமத கட்டணம் பெறக்கூடாது. அதேபோல, அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொழில் துறையினருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago