கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமிரி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய ஊழியர் என 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (48). இவர், திமிரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். இவருக்கு, சாமுண்டீஸ்வரி (43) என்ற மனைவியும், சுவேதா (20) என்ற மகளும், பூபதி (16) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வந்ததை தொடர்ந்து ஆற்காடு, திமிரி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஞ்சாட்சரம் கரோனாதடுப்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த வாரம் காய்ச்சலால் அவர் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு திடீரென அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதில், சிகிச்சை பலனின்றி பஞ்சாட்சரம் நேற்று பிற்பகல் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், பஞ்சாட்சரம் மகன் பூபதிக்கு மட்டும் கரோனா நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து,அவர் வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல, அரக்கோணம் அடுத்த பாணாவரம் காவலர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் சென்னை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரும் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago