கரோனா தடுப்பு நட வடிக்கையாக தமிழகத்தில் நேற்று அமலுக்கு வந்த இரு வார முழு ஊரடங்கால் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சாலைகள், பஜார் பகுதிகள் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் தீவிரமாக பரவிவரும் கரோனா வைரஸ் 2-வதுஅலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்குநேற்று அமலுக்கு வந்தது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகள், மீன் மற்றும் கோழி, இறைச்சிக் கடைகள், தேநீர் கடைகள் நேற்று காலை முதல், பகல் 12 மணி வரை இயங்கின. மருந்தகங்கள், பால் விநியோக கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வாகனங்கள் மட்டும் இயங்கின.
திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பஜார் பகுதிகளிலும், மாவட்டத்தில் உள்ள சென்னை- பெங்களூரு, சென்னை - கொல்கத்தா, சென்னை - திருப்பதி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு காரணமாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எல்லை பகுதிகளில் தேவையில்லாமல் வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக 46 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 900-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கின் முதல் நாள் என்பதால், நேற்று மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மறைமலை நகர், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஜார் பகுதிகள், முக்கிய சாலைகள் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருந்து கடைகள், பால் விநியோகக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் நேற்று செயல்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அபராதம் விதிப்பு
பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் காவல் துறையின் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறி அவசியம் இன்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தலைக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.100-ம்,கரோனா ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களுக்கு ரூ.100-ம்அபராதம் விதிக்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago