காவிரி டெல்டா பாசனத்துக்காக - ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்கலாம் : தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை

காவிரி டெல்டாவில் நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12-ம் தேதி திறக்கலாம் என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு ‘மேட்டூர் அணை பாசனப் பகுதி பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும்' என்ற பரிந்துரை கையேட்டை அந்தக் குழுவினர் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த மூத்த வேளாண் வல்லு நரும், முன்னாள் வேளாண்மைத் துறை இணை இயக்குநருமான பி.கலைவாணன் கூறியது: மேட்டூர் அணையில் தற்போது 62 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாசனத்துக்காக 167.25 டிஎம்சி தண்ணீர் பெறப்பட வேண்டும். எனவே, மொத்தமாக 229 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும்.

மேட்டூர் அணை நீரைக் கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங் களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இப்பகுதியில் நிகழாண்டு குறுவைப் பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர், தாளடியில் 3.25 லட்சம் ஏக்கர், சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர் மற்றும் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80,000 ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து நெல் பருவத்திலும் நாற்றுவிட்டு நடவு செய்தால், இந்த நீர் போதாது. எனவே, நிலத்தடி நீர் மற்றும் மழைநீரை முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும். குறுவைப் பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது. மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே இப் பரப்பில் நாற்றுவிட்டு நடவு செய்தால், மேட்டூர் அணையி லிருந்து பெறப்படும் நீர் தேவையில் 15 டிஎம்சி குறையும்.

இதேபோல, சம்பா பருவத் தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழைநீரைக் கொண்டு, புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்தால், நாற்றங் கால் தயாரிப்பு, நடவு வயல் சேறு கலக்குதல் போன்றவற்றுக்கு நீர் தேவைப்படாது. இதனால், 25 டிஎம்சி அளவுக்கு மேல் அணை நீரை சேமிக்க முடியும்.

எனவே, நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12-ம் தேதி திறப் பதற்கு பரிந்துரைத்துள்ளோம்.

இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே குறுவை நாற்றுவிட்டு, நடவு செய்து முடிக்க விவசாயிகளை அறிவுறுத்த வேண்டும். அவர்களின் வசதிக்காக மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இதற்கு விவசாயிகள் முன்னேற்பாடுடன் இருக்கும் வகையில், அணை திறக்கும் தேதியை மே 15-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.

மேலும் பாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை மராமத்து செய்ய போதிய நிதி அளித்து, மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பாகவே பணிகளை முடித்து, பாசனத் திறனை உயர்த்தி, அணை நீர் தேவையை குறைக்க வேண்டும்.

மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த, சம்பா சாகுபடி பரப்பில் 50 சதவீதம் நேரடி நெல் விதைப்பைச் செய்ய விவசாயி களுக்கு அறிவுரை வழங்குவதுடன், இதற்காக வேளாண் துறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்