திருப்பத்தூர் பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் : ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் டோமினிக் சேவியோ பள்ளியில் மேலும் ஒரு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப் படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுமருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால். அனைத்து வசதிகளும் உள்ள பகுதிகளில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் - தருமபுரி சாலையில் உள்ள விஜயசாந்தி மெட்ரிக் பள்ளியில் ஏற்கெனவே கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 100 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.

அங்கும் கரோனா நோயாளிகள் முழுமையாக நிரம்பியதால், கூடுதலாக வேறு இடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள டோமினிக் சேவியோ பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் மேலும் ஒரு கரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், சார் ஆட்சியர் வந்தனாகார்க் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, “திருப்பத்தூர் விஜயசாந்தி மெட்ரிக் பள்ளியில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் முழு அளவில் நோயாளிகள் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள அடுத்த கட்டிடத்தில் மேலும் ஒரு மையத்தை அமைக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால், ஒரே இடத்தில் நூற்றுக்கும்மேற்பட்ட தொற்று பாதித்தவர் களை வைப்பது ஆபத்தானது என்பதால் டோமினிக் சேவியோ பள்ளியில் கூடுதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வரும்’’ என்றார்.

திருமண மண்டபத்தில் சிகிச்சை?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் புத்துக்கோயில் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று மாலை ஆய்வு செய்தார்.

இங்கு, 60 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து பிறகே நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்