முழு ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு மற்றும் பொருளாதார சூழ்நிலை பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
தலைமை வகித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலாளருமான (கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால் வளத் துறை) கே.கோபால் தலைமை வகித்தார்.
இதகூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் கே.கோபால் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களின் அன்றாட வாழ்வு மற்றும் பொருளாதார சூழ்நிலை பாதிக்கப்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்ககை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், கரோனா பரிசோதனை மையங்கள், ஆக்சிஜன் அளவுகளை அதிகப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி, திருப்பூர் மாவட்டத்தில் நோய் தொற்றை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.
முன்னதாக, திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட சோளிபாளையம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம், அதே பகுதியில் செயல்பட்ட நியாய விலைக்கடையில் கரோனா பரவல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம், கல்லூரி சாலை சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா பரிசோதனை மையம், குமரன் மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago