ஓய்வின்றிப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் : பற்றாக்குறையை போக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஓய்வின்றி தொடர்ச்சியாகப் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், சிகிச்சை அளிப்பதில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பரவுவதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையில், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறும்போது, "1,000 பேருக்கு ஒரு மருத்துவர், ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்ற விகிதத்தில் மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். அதேபோல, செவிலியர்களும் மிகக் குறைந்த அளவிலேயே பணிபுரிகின்றனர். கரோனா தாக்கத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், வீடுகளுக்குக்கூட செல்ல முடியாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளதால், கடும் பணிச் சுமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்