நெல்லை, தென்காசியில் கரோனாவுக்கு 11 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 385 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 198 பேர் உட்பட இதுவரை 12 ஆயிரத்து 275 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 206 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 668 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 547 ஆகஉயர்ந்துள்ளது. நேற்று 891 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 269 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 884 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரைபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,949 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 25,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 4,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 215 பேரும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 179 பேரும், தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 84 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் மருத்துவமனையில் சுமார் 150 பேரும், வீட்டுத் தனிமையில் 850 பேரும் கோவில்பட்டி பகுதியில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த53 வயது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 58 வயது தபால்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 700-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று மரணமடைந்தனர். கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்