செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் காரிய மேடை அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், 2 கி.மீ., தொலைவில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்கின்றனர்.
மயானத்தில் எரிமேடை மட்டுமே உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு சடங்குகள் செய்ய காரிய மேடை மற்றும் தண்ணீர் வசதி கிடையாது. இதனால், திறந்தவெளி பகுதியில் சடங்கு செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மழைக் காலத்தில் மிகுந்த அவதிப்படுகின்றனர். கோடை காலத்தில் பந்தல் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், சடங்கு செய்வதற்கான தண்ணீரை வீட்டில் இருந்து சுமந்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்தில் காரிய மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். காரிய மேடை இல்லாமல் வெயில் மற்றும் மழை காலத்தில் அவதிப்படுகிறோம். காரிய மேடை கேட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் பலனில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று காரிய மேடை அமைத்து, தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago