ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் இடங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் வசிப்பவர்களுக்காக அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி அவர்களது வீடுகளுக்கே கிடைத்திடும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள கிராம மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தை 04567-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago