விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,631 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1,245 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேகமாக பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 21,788 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,871 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் 230 படுக்கைகளும், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தலா 140 படுக்கைகளும், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளும், சிவகாசி ஈஎஸ்ஐ மருத்துவமனையில் 70 படுக்கைகளும் என மொத்தம் 770 படுக்கை வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 240 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதேபோன்று கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரி, விருதுநகர் ஏஏஏ பொறியியல் கல்லூரி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, வில்லிபுத்தூர் விபிஎம்எம் பொறியியல் கல்லூரி, விருதுநகர் வித்யா பொறியியல் கல்லூரி என 9 இடங்களில் மொத்தம் 1,436 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 140 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் 425 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதித்த 989 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 979 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதில் இதுவரை 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் 226 ஆக்ஸிஜன் வசதி படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4,97,563 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,47,386 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12,870 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில் 58 இடங்கள் கரோனா பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago