சேத்துப்பட்டு பகுதியில் அரசு உத்தரவை பின்பற்றி கரோனா தொற்று பரவலை தடுக்க கடைகளை மூட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வணிகர் களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சேத்துப் பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அரிதாஸ் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, “கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஊரடங்கின்போது அவசியமாக வீட்டை விட்டு வெளியே வரும் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
சேத்துப்பட்டில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருக்கும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, இதர கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்படும். கடைகளை மூடி கரோனா தொற்று பரவலை தடுக்க வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
இதில், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜன், மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்டப் பொருளாளர் முகமது சித்திக், சேத்துப்பட்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago