தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் பொறுப்பேற்றதை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் திமுகவினர் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல, கும்பகோணம் நகரில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன், கும்பகோணம் மேலக்காவேரியில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் ரமேஷ், தாராசுரத்தில் பேரூர் செயலாளர் சாகுல்ஹமீது, சுவாமிமலையில் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் கொண்டாடினர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக நகரச் செயலாளர் வாரை.பிரகாஷ், திருத்துறைப்பூண்டியில் நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல, முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டிக்கொண்டு, திருவாரூர் அருகே பெரும்புகளூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மொட்டையடித்துக்கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதுடன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் என 2 பேருக்கு திமுக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் உருவாகி 26 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் அரியலூர் பகுதிகளை உள்ளடக்கிய குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், இந்த 2 மாவட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, செட்டிக்குளம், பாடாலூர், நாட்டார்மங்கலம், குன்னம், திருமாந்துறை ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பேருந்து நிலையம், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, பசுபதிபாளையம், கருப்புகவுண்டன்புதூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago