பாணாவரம் அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை நள்ளிரவில் விவசாய நிலத்தில் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகேயுள்ள ரங்கா புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (67). இவர், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய நிலம் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது. விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் தங்குவதை கிருஷ்ணன் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, வீட்டில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட அவர் விவாசய நிலத்துக்குச் சென்றார்.
இதற்கிடையில், விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்துள்ளனர். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் பாணாவரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் லட்சுமிபதி மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விவசாய நிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனை மர்ம நபர்கள் நள்ளிரவில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது, உயிருக்கு பயந்து தப்பி ஓடிய கிருஷ்ணனை மர்ம நபர்கள் விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர். அவர் உயிரிழந்ததை உறுதி செய்தவர்கள் சாவகாசமாக அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குச் சென்று ரத்தக்கறை படிந்த கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு நடந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாணாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago