காட்டு யானையை தாக்கிய 3 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

திருமூர்த்திமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானையை தாக்கிய மலைவாழ் மக்கள் மூன்று பேர் மீது வனத்துறை வழக்கு பதிந்து தேடி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில் திருமூர்த்திமலை, மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி, தளிஞ்சி, ஈசல் திட்டு, கோடந்தூர் என மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், திருமூர்த்தி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானையை, அப்பகுதியில் மூர்க்கமாக கற்களாலும், தடிகளாலும் தாக்கி விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, வீடியோவை ஆய்வு செய்து, திருமூர்த்திமலை செட்டில்மென்ட்டில் உள்ள மூன்று இளைஞர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது உடுமலை வனச்சரகர் தனபால் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இந்த சம்பவம் தொடர்பாக, ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் ஈசல் திட்டு மலைப்பகுதி காளிமுத்து (25), செல்வம் (32), அருள்குமார்(30) ஆகிய மூன்று பேரின் மீது வனச்சட்டத்தின்படி காயப்படுத்துதல், அரசுக்கு சொந்தமான சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் வனக்குற்றம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தேடி வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்