‘நீலகிரியில் கரோனா தடுப்பூசி போடும் பணி 2 நாட்கள் நிறுத்தம்’ :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, "கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் பட்டுள்ளது. சென்னையில் இருந்து விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட இருக்கிறது. அதன் பின்னர் தடுப்பூசிசெலுத்தும் பணி நடைபெறும். உடல்வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் சிலர் தாங்களாகவே மருத்துவரிடம் மருந்து,மாத்திரைகளை பெற்றுக்கொள்கின்றனர். தொற்று பாதிப்பு தீவிரமான பின்னர் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால், கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. தற்போது தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதை கருத்தில்கொண்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கி தயார் நிலையில்வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.சி.யூ.வார்டுகளை ஆக்சிஜன் வசதியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். செவிலியர்கள், மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் போதுமான படுக்கை வசதிகள் இருந்தாலும், கூடுதலாக தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்