மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதால் ‘ஸ்டெர்லைட்’ ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் மதுரைக்கு முன்னு ரிமை வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஆட்சியர் தமிழக அரசிடமும், தூத்துக்குடி ஆட்சியரிடமும் ஆலோசித்து வருகிறார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ‘கரோனா’ சிகிச்சைக்காக தற்காலிகமாக ரூ.350 கோடியில் கட்டிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ‘கரோனா’ சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்காக 1,100 ஆக்சிஜன் படுக்கைகள் உ்ளளன. 250 சாதாரண படுக்கைளும் உள்ளன. இதுதவிர மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த தோப்பூர் அரசு காசநாய் மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன.
இந்த மருத்துவமனைகளில் மதுரை மாவட்டத்தினர் மட்டுமல்லாது விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங் களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பாதிக்கப் படுகின்றனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனை அளவுக்கு தனியார் மருத்துவ மனைகளில் போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதியில்லை. அதனால் ஒட்டுமொத்த நோயாளிகளும் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை முற்றுகை யிடுவதால் ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கைகள் கிடைப்பதிலும், அவர்கள் தடையின்றி சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆட்சியர் அன்பழகன் ஆய்வு செய்து, டீன் சங்குமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்தெந்த வகையில் ஆக்சிஜன் சேவையை துரிதமாக செயல்படுத்த முடியுமோ அதை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்கு கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதுரையில் ஆக்சிஜன் படுக்கை கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப் படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 26 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. தற்போதுவரை அது தடையில்லாமல் கிடைக்கிறது. ஆனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்.
கடந்த ஆண்டைப் போல் கரோனா பாதிப்பு இல்லை, கடந்த ஆண்டு கடைசி பாதிப்பாகவே மூச்சுத் திணறல் வந்தது. ஆனால் தற்போது நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனால் பாதிக்கப்படுகிற அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. மேலும் பல இடங்களில் இருந்து மதுரை மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் மதுரைக்கு முக்கியத்தும் கொடுத்து வழங்க அங்குள்ள ஆட்சியரிடம் பேசி வருகிறோம்.
ஏனெனில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டு மல்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அதிகளவு சிகிச்சை பெறுவதால், அந்த உரிமையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் கூடுதலாக மதுரைக்கு கேட்கிறோம். தற்போது மதுரையில் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆக்சிஜன் தேவை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால்தான் இங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago