திருவையாறு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முன்னேற்பாடுகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், திருவையாறு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

திருவையாறு பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவ்வப்போது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம். அதேபோல, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி தேவையான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தி வருகிறோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருந்தபோதிலும், வருங்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் சூழ்நிலையை உணர்ந்து, தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். கிராமப்புற மக்களுக்கு ஏதேனும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், திருவையாறு அரசு மருத்துவமனையிலும், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றார்.

ஆய்வின்போது, திருவையாறு தலைமை மருத்துவ அலுவலர் லோகநாதன், உதவி மருத்துவ அலுவலர் சகாய வினோத், வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார், திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE