கரோனாவை தடுக்க முகக்கவசமேமுதல் ஆயுதம் என திருப்பூர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூரில் கரோனா வேகமாக பரவி வருவதால் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் சார்பில், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்டரமணி தொடங்கி வைத்து பேசும்போது ‘‘கரோனாவை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. கரோனாவை தடுப்பதில், நம்மிடம்உள்ள முதல் ஆயுதம் முகக்கவசம். அதேபோல, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
நாட்டுநலப்பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசினார். தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து, ‘கரோனாவை தடுக்கும் ஆயுதம் முகக்கவசம்.முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள்’ என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிறகு குப்பாண்டம் பாளையம் பிரிவில் உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துக்கூறியும், தங்கள் உடலில் விழிப்புணர்வு பதாகைகளை தொங்கவிட்டும், கிருமி நாசினி கொடுத்தும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago