கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு களால், பூக்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டதோடு, உரிய விலையும் கிடைக்காததால் பூக்களை குப்பையில் கொட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள பூ சந்தையில் நாள்தோறும் ஏராளமானோர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்களை சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகளும் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்துவருகிறது. எனினும், கரோனாஊரடங்கு கட்டுப்பாடுகளால் பூக்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பூ சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
கோயில் விழாக்களுக்கு கட்டுப்பாடு, திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகளால் பூக்களின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து அதிகமாக இருந்தபோதும் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால் விற்பனையாகாத பூக்களை, குப்பையில் கொட்டிச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அரளி, சம்பங்கி, கோழிப்பூ ஆகியவை கிலோ ரூ.10-க்கும், முல்லை ரூ.40- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதே பூக்களின் விலை 5 மடங்கு அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago