இரவுநேர ஊரடங்கை மீறியதாக 582 வழக்குகள் : திருப்பூர் மாநகர போலீஸார் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் இரவுநேர ஊரடங்கை மீறியதாக இதுவரை 582 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் மார்ச் 25-ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இன்று (மே 6) முதல் வரும் 20-ம் தேதி வரை, புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் மட்டும் குளிர்சாதன பயன்பாடின்றி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர போலீஸார் கூறும்போது ‘‘திருப்பூர் மாநகரில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க, மாநகர் முழுவதும் 600 போலீஸார் பணியில் ஈடுபடுவார்கள். இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறியதாக, மாநகரில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்