கரோனா பாதித்தோருக்கு வட்டார அளவில் - 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்கு வட்டார அளவில் 100 படுக்கைகள்கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலர் இ.சங்கர், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்கூறியிருப்பதாவது:

கரோனா 2-வது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துவிட்டது. நோய்தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையையே நாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

வாக்குவாதம், சர்ச்சைகள்

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு வருவதால், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்களிடையே தேவையற்ற வாக்குவாதம், சர்ச்சைகள் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க, வட்டார அளவில் 100 படுக்கை வசதிகள், தேவையான அளவுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர். காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்