மேற்கு வங்க வன்முறைகளுக்கு பாஜக எதிர்ப்பு - திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் :

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடரும் வன்முறைகளுக்கு எதிராக, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பிறகும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜகவினரை குறிவைத்து தாக்குவதாகவும், பல்வேறு பகுதிகளில் கடைகள் சூறையாடப்படுவதாகவும் பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, சோழவரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், பாஜக மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், ராஜா, அரசு தொடர்பு பிரிவு மாநிலத் தலைவர் பாஸ்கரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமெழுப்பினர்.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தேரடி பெரியார் தூண், சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரும்புதூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு, துணைத் தலைவர் செல்வமணி, பொதுச் செயலர் கூரம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரும்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜியின் படத்தை பாஜகவினர் எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்