ராமநாதபுரத்தில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு - கரோனா நோயாளிகளை `டிஸ்சார்ஜ்' செய்யும் ​தனியார் மருத்துவமனைகள் :

ராமநாதபுரத்தில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து கிடைக்காததால், தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 1,227 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர, ராமநாதபுரத்தில் உள்ள சில தனியார் மருத்துவ மனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி செலுத்தப்படுகிறது. இந்த ஊசியின் விலை ரூ.1500 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த ஊசி கிடைக்கவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால், இந்த ஒரு ஊசியின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000-க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த ஊசி கிடைக்காததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தனியார் மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ராமநாதபுரத்தில் தொடர்கிறது.

அதேநேரம், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதிய அளவு ரெம்டெசிவிர் ஊசி மருந்து கையிருப்பில் உள்ளதாக அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.அல்லி கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவு ரெம்டெசிவிர் ஊசி மருந்து கையிருப்பில் உள்ளது. இந்த ஊசி மிகவும் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்குச் செலுத்தப்படுகிறது", என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE