ஆந்திராவில் கரோனா பரவலை தடுக்க 18 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசுப் பேருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா 2-வது பரவலை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அதனடிப்படையில், ஆந்திர மாநிலத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அம்மாநிலத்தில் பகல் 12 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 6 மணி வரை 18 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டது.
இதனால், ஆந்திராவில் இருந்து தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங் களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளையும் ஆந்திர அரசு முழுமையாக ரத்து செய்தது.
ஆந்திராவில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 35 தமிழக அரசு பேருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, வேலூரில் இருந்து தனியார் பேருந்துகள் ஆந்திராவுக்கு நேற்று காலை 6 மணிக்கு மேல் இயக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தனியார் பேருந்தில் அதிக அளவில் பயணிகள் பயணித்தனர்.
இருப்பினும், காட்பாடி அடுத்த கிறிஸ்ட்டியான் பேட்டை அருகே ஆந்திர எல்லைக்குள் பகல் 12 மணிக்கு மேல் நுழைய முயன்ற தனியார் பேருந்துகளை அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தமிழக பேருந்துகள் ஆந்திர மாநிலத் துக்குள் வரலாம், அதற்கு மேல் அனுமதியில்லை என காவல் துறையினர் தெரிவித்ததால் தனியார் பேருந்துகளில் பயணித்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் நடந்தே ஆந்திராவுக்கு சென்றனர்.
இந்நிலையில், ஆந்திராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பேருந்தில் பயணிக்க முடியாத பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேநேரத்தில், காட்பாடி ரயில் நிலையம் வழியாக ஆந்திரா செல்லும் ரயில்களில் பயணிக்க நிறையபேர் அங்கு காத்திருந்து ரயிலில் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் தவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago