கூடலூர் தொகுதியை 15 ஆண்டுகளுக்கு பின், திமுகவிடமிருந்து தன்வசமாக்கியிருக்கிறது அதிமுக.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்களை குடியமர்த்தி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதனால், கூடலூர்தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தது.
கடந்த 2006-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக இருந்த கூடலூரில், திமுக சார்பில் க.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தனித்தொகுதியாக மாற்றப்பட்டதும், திமுகவை சேர்ந்த மு.திராவிடமணி வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு இரண்டாவது முறையும் திராவிடமணி வெற்றி பெற்றார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல்தேதி அறிவிப்புக்கு ஓராண்டுக்குமுன்னரே, கூடலூர் தொகுதியை கைப்பற்ற அதிமுகவினர் களப்பணியாற்ற தொடங்கினர். தாயகம் திரும்பிய தமிழர்களிடையே செல்வாக்கை வளர்க்க தொடங்கினர்.
அதிமுக ஆட்சியில் இருந்ததால், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றினர். இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற மு.திராவிடமணி ஆயத்தமான நிலையில், நெல்லியாளம் நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.காசிலிங்கம் திமுகசார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கூடலூர் தொகுதியில் பரிச்சயம் இல்லாத காசிலிங்கம் அறிவிக்கப்பட்டதால், அதிமுக முகாம் உற்சாகமானது. அதிமுக தரப்பில் தாயகம் திரும்பிய தமிழரான பொன். ஜெயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞரான ஜெயசீலன், கூடலூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உதவி வருவதால், மக்களிடம் எளிதாக சென்றடைந்தார். மேலும், கூடலூர் தொகுதியின் பொறுப்பு அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், பொருளாதாரரீதி யாக அதிமுக பலமடைந்தது. வேட்பாளரின் பிரச்சார செலவுமுழுவதையும் அவர் செய்தார். சிறுபான்மை மக்கள் அதிமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சிறுபான்மை மக்களின்வாக்குகளை பெறும் வகையில்,முதல்வராக இருந்த கே.பழனிசாமியை கூடலூருக்கு வரவழைத்து அம்மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, கணிசமான வாக்குகளை அதிமுக வசம் திரும்பசெய்தார். கூடலூர் தனது கோட்டை என்று திமுக எண்ணியிருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஓராண்டுக்கு முன்னரே களமிறங்கி திமுகவின் கோட்டையை அதிமுக தகர்த்துள்ளது.பொன்.ஜெயசீலன்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago