வாக்கு எண்ணிக்கையின்போது திமுக முன்னிலை வகித்ததையடுத்து திருச்செங்கோடு அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் கடந்த 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் திருச்செங்கோடு உட்பட 4 தொகுதியில் திமுகவினர் முன்னிலை வகித்து வந்தனர். இதையறிந்த திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்சியினர் யாரும் ஈடுபட வேண்டாம், என கட்சித் தலைமை அறிவித்தது. அதையும் மீறி ஒரு சில இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதுபோல் திருச்செங்கோடு அருகே பிரிதி என்ற கிராமத்தில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மதியம் திமுகவினர் சிலர் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் வீடு மீது பட்டாசு விழுந்துள்ளது. இதை அவர் தட்டிக்கேட்டபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரிதி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஈஸ்வரி (42) என்பவர் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் திமுக பிரமுகர் பிரகாஷ் (29) என்பவர் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago