தி.மலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் - மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கிய கோழி எலும்பு அகற்றம் : அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் அசத்தல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 வயது மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட 3 செ.மீ., அளவுள்ள கோழி எலும்பை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலம் நேற்று வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.

தி.மலை அடுத்த ஆருத்திராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் பழனி மனைவி ராஜாமணி(65). இவர், நேற்று முன்தினம் காலை கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது, கோழி இறைச்சியின் ஒரு பகுதி, அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக, அவரால் தண்ணீர் கூட பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.

இதையடுத்து, திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜாமணி நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவரை, காது, மூக்கு, தொண்டை துறையின் தலைவரான மருத்துவ நிபுணர் எம்.இளஞ்செழியன் மற்றும் சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, மூதாட்டியின் உணவுக் குழாய் பாதையில் அடைப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை அரங்குக்கு மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார். அங்கு மயக்கவியல் சிறப்பு மருத்துவர் திவாகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூதாட்டிக்கு மயக்க மருந்து செலுத்தினர். பின்னர், எண்டோஸ்கோப் மூலமாக அறுவை சிகிச்சை இல்லாமல், உணவுக் குழாயில் சிக்கி இருந்த கோழி எலும்பு மற்றும் இறைச்சி துண்டு அகற்றப்பட்டது. இதற்காக, அறுவை சிகச்சை அரங்கில் 30 நிமிடம் செலவிடப்பட்டுள்ளது.

இது குறித்து துறைத் தலைவரான மருத்துவ நிபுணர் எம்.இளஞ்செழியன் கூறும்போது, “கோழியின் இறைச்சியை உட்கொண்டபோது, 65 வயதான மூதாட்டியின் உணவுக்குழாயில், எலும்புடன் கூடிய இறைச்சி துண்டு சிக்கியுள்ளது. அவரால் தண்ணீர் கூட பருக முடியவில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (நேற்று) காலை வந்தார்.

இதையடுத்து, மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த கோழி எலும்பு மற்றும் இறைச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோப் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

உணவுக் குழாயில் இருந்து முதலில் இறைச்சி துண்டும் மற்றும் 2-வதாக கோழி எலும்பு வெளியே எடுக்கப்பட்டது. கோழி எலும்பின் அளவு சுமார் 3 செ.மீ., இருக்கும். பொதுவாக உணவு உட்கொள்ளும்போது, நன்றாக மென்று சாப்பிட வேண் டும். அவ்வாறு உணவை சாப் பிடும்போது, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்