திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்டத்திலுள்ள 6 பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தாராபுரம் (தனி), பல்லடம் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன. காங்கயம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும். அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு தொகுதி இயந்திரங்கள் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருப்பூர் தெற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி 1-ம் மண்டல அலுவலகமான வேலம்பாளையம் அலுவலகத்திலும், உடுமலைப்பேட்டை தொகுதியின் இயந்திரங்கள், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மடத்துக்குளம் தொகுதி இயந்திரங்கள் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டன. ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.
பாதுகாப்பு அறை குறித்த விவரங்கள் வேட்பாளர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டப்பட்டது. இதையடுத்து, அந்த அறைகள் சீலிடப்பட்டன. இதனை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதேபோல, சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெறும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 5 இயந்திரங்கள் பழுதடைந்தன. தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தலா ஓர் இயந்திரமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்தன. மேற்கண்ட இயந்திரங்களின் ஒளித்திரையில் வாக்கு எண்ணிக்கை காண்பிக்காததால், விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்கு சீட்டுகளை எண்ணி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, "இயந்திரங்கள் பழுதடைவது வழக்கமாக இருக்காது. இயந்திரங்கள் ஒவ்வொரு நிலையிலும், பெல் பொறியாளர்கள் மூலமாக சோதனை செய்து பயன்படுத்துகிறோம். பழுதடைந்த 5 இயந்திரங்களுக்கு பதிலாக, விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குச்சீட்டுகளை எண்ணி வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்துள்ளோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago