ஊரடங்கு நேரத்தில் திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள சங்கிலிப்பள்ளம் ஓடையில் சாயக் கழிவுநீர் ஓடியது.
திருப்பூரில் செயல்படும் சில சாய ஆலை நிறுவனங்களில் இருந்து, அவ்வப்போது முறைகேடாக சாய நீர் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் புகார் அளிப்பார்கள். இந்நிலையில், ஊரடங்கைப் பயன்படுத்தி திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள சங்கிலிப்பள்ளம் ஓடையில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை சாய ஆலையினர் சிலர் சாய நீரை திறந்துவிட்டுள்ளனர்.
இதனால் ஓடையில் சாயநீர் வெள்ளம்போல ஓடியது. ஊரடங்கு நேரம் என்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இப்படி செய்வதாக, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "ஊரடங்கு வாய்ப்பை பயன்படுத்தி சாய நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்காணிக்காமல் விட்டுவிட்டால், ஊரடங்கு நாட்களின்போது இது தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது. மழைக் காலங்களில் சாயநீர் வெளியேற்றுவதை வழக்கமாக வைத்திருப்பதைப்போல, தற்போது ஊரடங்கு காலத்திலும் சத்தமின்றி சாய நீரை வெளியேற்றும் பணியை சாய ஆலையினர் சிலர் செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சரவணக்குமார் கூறும்போது, "சங்கிலிப்பள்ளம் ஓடையில் ஆய்வு செய்தோம். அப்பகுதியிலுள்ள சாய ஆலைகளை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். இதனை யார் செய்தது என்று இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago