செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மூடிவைக்கப்பட்டுள்ள நகராட்சிமின் மயானத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் தினமும் சுமார் 1,500 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் உடல்கள் மறைமலை நகர் நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு இறப்பு விகிதம் அதிகரித்தபோது செங்கல்பட்டு நகராட்சி மின்தகன மேடை பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. மறைமலை நகர் நகராட்சிக்கு சடலங்களை கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன், இறந்தவர்களின் உறவினர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறப்பவர்களின் உடல்களை நகராட்சி மின் மயானத்தில் எரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
லஞ்சப் புகார்
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் இ.சங்கர் கூறும்போது, "கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுத்தர லஞ்சம் கேட்கின்றனர். சடலத்தை பிணவறைக்கு கொண்டுசெல்ல ரூ.500, பிணவறையில் சடலத்தைக் கையாள ரூ.500, உடலைஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு ரூ.1,000, உடலை எரியூட்ட நகராட்சி மயானத்தில் ரூ.2,000, சுகாதார ஆய்வாளருக்கு ரூ.2,000 என பலரும் லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எரிக்கும் வகையில், மூடிக்கிடக்கும் நகராட்சி மின் மயானத்தை உடனடியாக திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago