திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வர நாடக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட கலைக்குழு சார்பில் கரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாடக கலைக்குழுவைச் சேர்ந்தவர்கள் எமதர்மன், காளி வேடம் அணிந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். 45 வயதை கடந்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவப் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போர் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டில் தனித்திருக்க வேண்டும் என தங்களது நடிப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல, கரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் மக்கள் உடல் நலனையும், குடும்ப நலனில் அக்கறை காட்ட வேண்டும். சமூக பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கி நாடக கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கான, ஏற்பாடு கள் மகளிர் திட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago