குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

திருவள்ளூர் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, அந்த நபர் திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பதும், அவர் மீது பல்வேறு ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தமிழரசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்பி அரவிந்தன் பரிந்துரை செய்தார். அதை ஏற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தமிழரசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் தமிழிரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், மப்பேடு பகுதியில் வீட்டில் மது பாட்டிலை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, வேலு என்பவர் காவல்துறையினரிடம் பிடிபட்டார். இவர் மீதும் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் கூடுதலாக விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE