திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது திருநின்றவூர் ரயில் நிலையம். திருநின்றவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலை, வியாபாரம், படிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் உள்ளஒன்றாம் நடைமேடையில் 80 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த நாவல் மரம் இருந்தது. வெயில் காலத்தில் பயணிகளுக்கு நிழல் தரும் மரமாகத் திகழ்ந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய நிவர் புயலின்போது, இந்த நாவல் மரம் வேறோடு சாய்ந்தது. அப்போது, ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயில் பெட்டி மீது மரத்தின் கிளைகள் விழுந்தன. ரயில்வேஊழியர்கள் பலமணி நேரம் போராடி ரயில் பெட்டி மீது விழுந்த மரக்கிளைகளை அகற்றினர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது, புயல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும், வேறோடு சாய்ந்த மரத்தை ரயில்வே ஊழியர்கள் முற்றிலும் அகற்றாததால், நடைமேடையில் ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தது. இதையடுத்து, மரத்தை அகற்ற வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் நேற்று மரத்தை அகற்றினர். இதையடுத்து, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநல சங்கம் சார்பில், ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago