சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் சிகிச்சையில் உள்ளனர். இததவிர 150 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 260 மட்டுமே உள்ளன. கரோனா பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமின்றி, கண்காணிப்பில் உள்ள பலருக்கும் மூச்சுத் திணறல் உள்ளது.
இதனால் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு மாற்றி, மாற்றி ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மேலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஷிப்டு முறையில் தினமும் 65 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். கரோனா வார்டில் 4 நாட்கள் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒருவாரம் ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனால் மருத்துவர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம். சிவகங்கை மாவட்டத்துக்கு மினி கிளினிக்குகளில் பணிபுரிந்த 6 மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து 20 முதுநிலை மருத்துவ மாணவர்கள் வந்துள்ளனர்,’ என்று கூறினர்.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், கண்காணிப்பில் உள்ளோரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் மட்டும் அனுமதிக்காமல், ஆங்காங்கே அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளை ஏற்படுத்தி அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago